Saturday, June 8, 2019


நூலின் பெயர் - தமிழ் இதழ்கள் 1915 - 1966
ஆசிரியர் - ரா.அ.பத்மநாபன்
இந்நூலின் ஆசிரியர் 1933-ல் தமது 16 ஆம் வயதிலேயே ஆனந்த விகடன் வழியாகத் தமிழ்ப் பத்திரிக்கை உலகில் நுழைந்தவர். பின்னர், ஜெயபாரதி (1936 - 37), ஹநுமான் (1937), ஹிஸ்துஸ்தான் (1938), தினமணி கதிர் (1965- 66) ஆகிய இதழ்களில் பணியாற்றிய அனுபவம் மிக்கவர். ஓர் ஆராய்ச்சியாளராக தமிழ் இதழ்களைத் தேடிப் படித்ததோடு, தமிழ் இதழியலின் வளர்ச்சியை நேரடியாகப் பார்த்தும் பணியாற்றியும் வாழ்ந்தும் உணர்ந்தவர். அந்த வகையில் இந்நூலில் இதழியலோடு தொடர்புடைய அந்தக் கால நிகழ்வுகளை தகவல் களஞ்சியமாக நமக்கு வழங்கியுள்ளார்.
இந்நூலில் சுதேசமித்திரன், தேசபக்தன், தமிழ் ஸ்வராஜ்யா, தமிழ்நாடு, இந்தியா, ஜெயபாரதி, ஆனந்தபோதினி, ஆநந்த குண போதினி, விகடன், மணிக்கொடி, தினமணி, ஹிந்துஸ்தான் இதழ்களின் உருவான வரலாறு, அதன் கொள்கைகள், அதில் பணியாற்றியவர்கள் என்று ஒவ்வொரு தகவல்களையும் படிக்கப் படிக்க விறுவிறுப்பும் கூடவே  இதுபோன்ற நல்ல நூல்களைப் படித்தோம் என்ற மன நிறைவும் ஏற்படுகிறது.
இங்கு ஒன்றிரண்டு இதழ்களின் தகவல்களை மட்டும் பகிர்ந்து கொள்கிறேன்.
பொதுவாக எல்லா இதழ்களுமே தேசிய விடுதலைக்கு ஆதரவாய்,  காந்தியக் கருத்துகளை மக்களிடம் பரப்புவதையே நோக்கமாகக் கொண்டிருந்தன. இதழ்களுக்கு வருவாய் ஈட்டித் தருவன விளம்பரங்கள்தான். மேலேக் குறிப்பிட்ட இதழ்களில் ஜெயபாரதி இதழ் மட்டும் காந்தியக் காங்கிரஸ் கொள்கையை மிகத் தீவிரமாக கடைப்பிடித்தது. இதனால் அந்நிய நிறுவனங்களின் விளம்பரங்களை வெளியிடுவதில்லை என்ற வைராக்கியத்துடன் இதழை நடத்தினர். இதழாசிரியர் முதல் கடைநிலை ஊழியர் வரை உயர்ந்த லட்சியத்துக்காக வலிய வறுமையை ஏற்றார்கள்.
இந்தியன் எகஸ்பிரஸ் ஆங்கில நாழிதலின் ஒரு பகுதியாக தினமணி உருவானது. தினமணி என்றப் பெயர் சிறப்பான பெயரை அனுப்புபவருக்கு ரூ.10 வழங்கப்படும் என்ற பரிசுப் போட்டியின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டது. இவ்விதழ்களை மும்பையிலிருந்து நிர்வாகத்தைநடத்தி வந்தவர் சதானந்து என்ற தமிழர்.  இவரும் விடுதலை வேட்கை கொண்டவர். இதழ்களையும் அவ்வாறே நடத்த விரும்பினார். இவரது தந்தையும் ஓர் இதழாசிரியர். தினமணியின் ஆசிரியப் பொறுப்பை எஸ். வி.சாமி அவர்களும், இணை ஆசிரியர் பொறுப்பை டி.எஸ்.சொக்கலிங்கம் அவர்களும் ஏற்று நடத்தினர்.
இந்திய இதழ்களுக்கு அந்தக் காலத்தில் செய்தியை வழங்கும் நிறுவனமாக ராய்ட்டர் செய்தி நிறுவனம் மட்டுமே இருந்தது. இந்நிறுவனம் பிரிட்டிஷ் அரசு சார்புடைய நிறுவனம் என்பதால் பல முக்கியமான செய்திகளை மறைத்தது.  இதை உணர்ந்த சதானந்து அவர்கள்  ராய்ட்டர் நிறுவனம் தராத தேசிய முக்கியம் வாய்ந்த செய்திகளைத் தருவதற்காக "ப்ரீ ப்ரஸ் ஆஃப் இந்தியா" என்ற செய்தி வழங்கும் நிறுவனத்தை துவங்கினார். ஆனால் பெரிய பத்திரிக்கை நிறுவனங்கள் ப்ரீ ப்ரெஸ் ஆஃப் இந்தியா நிறுவனத்திலிருந்து செய்திகளை வாங்கி வெளியிட தயங்கின. வருவாய் இருந்தால் தானே தொடர்ந்து நிறுவனத்தை நடத்த முடியும்? தேசியச் செய்திகளை கொடுத்தாலும் வெளியிடும் பத்திரிக்கை அதிகம் இல்லை என்பதால் சதானந்து அவர்கள், தாமே தேசமெங்கும் பத்திரிக்கைகளை நடத்தலாம் என்று முடிவு செய்கிறார்.
அதன் பிறகுதான் ஆங்கிலத்தில் இந்தியன் எக்ஸ்பிரஸ், தமிழில் தினமணி மற்றும் தெழுங்கு, குஜராத்தி மொழிகளிலும் ஆரம்பிக்கிறார். இதற்கு பலர் உதவி செய்தனர்.
தன் நிறுவன செய்திகளை மட்டும் வெளியிடாமல் ராய்ட்டர், அசோசியேட் பிரஸ் நிறுவனச் செய்திகளையும் வெளியிட்டு வந்தார். திடீரென்று
செய்திகளைத் தருவதை இவ்விரு நிறுவனங்களும் நிறுத்தின. இதனால் வெளிநாட்டு செய்திகள் கிடைப்பது தடைப்பட்டது. இதன் காரணமாக சதானந்து அவர்கள் லண்டனில் செய்தி நிறுவன அலுவலகத்தை திறந்தார். வெளிநாட்டு உடனடிச் செய்திகளைத் தருவவதற்காக, அதிகச் செலவு ஆகும் என்று கூட பார்க்காமல் தினமும் தொலைப்பேசி மூலம் செய்திகளைப் பெற்று வெளியிட்டார்.
ஆங்கில அரசாங்கத்திற்கு எதிரான பல முறை கருத்துகளை வெளியிட்டதால் அவர்களின் பிடியில்  தொடர்ந்து சிக்கினார். இதனால் பத்திரிக்கை நடத்துவதற்கு ஆங்கில அரசாங்கத்திடம் அடுத்தடுத்து கட்டிய ஜாமின் தொகை ஐம்பதாயிரம் வரை இழந்தார். அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் பத்திரிக்கையை தொடர்ந்து நடத்தி வந்தார். ஐம்பதாயிரம் ரூபாய் என்பது அந்தக் காலத்தில் எவ்வளவு பெரியத் தொகை?   அவர் பணத்தை இழந்ததை சாதாரணமாக எடுத்துக் கொண்டதை நினைத்தால் வியப்பாக உள்ளது!
தமிழ்நாட்டில் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி அவர்கள் சுதேசி கப்பல் இயக்கத்தை என்ன நோக்கத்துக்காக தொடங்கினாரோ? அதே நோக்கத்துக்காக மற்றொரு தமிழரான சதானந்து அவர்கள் பத்திரிக்கை நிறுவனத்தை தொடங்கினார். ஆனால் சதானந்து அவர்களுக்கு எந்த புகழும் கிட்டவில்லை. மறைக்கப்பட்டுவிட்டது.
சதானந்து அவர்களின் தொடக்க கால முயற்சிகளெல்லாம் வழிகாட்டிய அனுபவத்தால், நாடு சுதந்திரம் பெற்றதும் சர்தார் வல்லபாய் பட்டேல் அவர்களின் தீவிர முயற்சியால் " பிரஸ் டிரஸ்ட் ஆப் இந்தியா" என்ற இந்திய செய்தி நிறுவனம் உருவானது.
தினமணி தொடர்பான பல தகவல்கள் 158 பக்கங்கள் கொண்ட புத்தகத்தில் 50 பக்கங்கள் உள்ளன. ஆனால் சுருக்கமாக சில நிகழ்வுகளை மட்டுமே கூற இயலும் என்பதால் இத்துடன் முடித்துக் கொள்கிறேன்.
இதில் குறையாக எனக்குப் படுவது: 1915 - 1966க்கு இடைப்பட்ட காலங்களில் கல்கி, தீபம், விடுதலை போன்ற இன்னும் பல இதழ்கள் இருந்திருக்கின்றன. அவைகளைப் பற்றி குறிப்பிடாமல் நூலாசிரியர் தவிர்த்துள்ளார். குறிப்பிட்ட அந்தக் காலங்களில் இருந்த எல்லா நாழிதழ்களையும் இந்நூலில் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். ஆனாலும் இது ஒரு தகவல் களஞ்சியமே.





No comments:

மருமக்கள்வழி மான்மியம் - கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை மருமக்கள்வழி மான்மியம் 1916ல் திருவனந்தபுரத்திலிருந்து வெளிவந்த தமிழன் என்ற இதழ...