Saturday, June 8, 2019

மருமக்கள்வழி மான்மியம் - கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை



மருமக்கள்வழி மான்மியம் 1916ல் திருவனந்தபுரத்திலிருந்து வெளிவந்த தமிழன் என்ற இதழில் தொடராக வெளிவந்தது. 1942ல் புதுமைப்பதிப்பகம் புத்தகமாக்கி வெளியிட்டது.  மறுபதிப்பை 2005ல் பாரி நிலையம் வெளியிட்டது. மூலப்பதிப்பில் ஏடு சிதைந்து இருந்ததால் மறு பதிப்பில் பல இடங்களில் சொற்களும், சில வரிகளும் இல்லாமல் ஏடு சிதைந்துவிட்டது என்ற குறிப்பு மட்டுமே உள்ளது நமக்கு இழப்புதான்.
 
இந்த புத்தகம் நாஞ்சில் நாட்டில் உள்ள ஒருவரின் சொத்து அவரது சகோதரியின் மகனுக்குத்தான் உரிமை என்று  முன்பு வழக்கத்தில் இருந்த சட்டத்திற்கு எதிராக புனையப்பட்ட கவிதை வழி கதையாகும்.

ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த பதினாறு வயது பெண், ஒரு பிரபுக்கு ஐந்தாவதாக வாக்கப்படுகிறாள். கணவன் வீட்டில் மாமி, சக்களத்தி, மதினி இவர்களால் அவள் படும் துயரத்திற்கு அளவேயில்லை. அதை அவளே சொல்வதாக இந்நூல் இயற்றப்பட்டுள்ளது.

என்கதை கேளும்! என்கதை கேளும்!
இரக்கமுள் ளோரே என்கதை கேளும்!
நூல்களைக் கற்ற நுண்ணறி வோரே!
நடுநிலை நீதி நடத்தும்நல் லோரே!
மக்களைப் பெற்று வளர்க்கும் சீலரே!

ஏழையென் துயரம் எல்லாம் கேளும்,
காசினி மீதென் கதைபோல் இல்லை.
சீதையின் கதையும் சிறுகதை யாகும்.
பாஞ்சா லியின்கதை பழங்கதையாகும்.
தமியேன் கதைக்குச் சந்திர மதிகதை

என்று கதை ஆரம்பத்திலேயே நாம் உள்ளிழுக்கப்படுகிறோம்.

இந்த உலகம் சிறுக்கும் அளவுக்கு பெரிதாக உள்ள அவளின் துயரக் கதை ஒரிரண்டு நாளில் படிக்க முடியாத  படிக்க படிக்க நீண்டு கொண்டே இருக்கும் மிகப் பெரிய புத்தகமாகும்.

ஐயோ தெய்வமே! ஐயோ தெய்வமே!
உற்றதெ லாம்சொல ஒருகழி நூலாம்.
ஒருநாள் போதுமா! இருநாள் போதுமா?
முற்றும் கேளும் முடிவையும் பாரும்!

சக்களத்தி நால்வரைப் பற்றி...

மனைவியர் வேலை வகையினைக் கேளும்;
தொழுத்துச் சாணம் வழிக்க ஒருத்தி;
தொட்டித் தண்ணீர் சுமக்க ஒருத்தி!
அடுக்களைச் சமையல் ஆக்க ஒருத்தி!
அண்டையில் அகலா திருக்க ஒருத்தி!
அத்தனை பேருக்கும் அடிமை யாளாய்

ஏழை பாவி யானும் ஒருத்தி.
எளியேன் சென்ற நான்முத லாக
எல்லா வேலையும் என்தலை மேலாம்.
பெண்டிர் நால்வரும் பென்ஷன் பெற்றனர்.

 தன் குடும்பத்தில் உள்ளவர்கள் பற்றியும், அவர்களது கொடுஞ்செயல்கள் பற்றியும் கண்ணீர் மல்க சொல்லுகிறாள்.

மாமனுக்கும் மருமகனுக்கும் (சகோதரியின் மகன்) நிலப் பிரச்சனை ஏற்பட்ட போது  மாறி மாறி தூற்றிக் கொள்ளும் பேச்சிகளிலும் கவிமணி அவர்கள் பகடி செய்துள்ளார்.

ஆரைக் கேட்டு நீர் ஐந்துகல் யாணம்
அடுக்கடுக் காகச் செய்தீர்? ஐயா!
பட்டப் பெயரும் 'பஞ்சகல் யாணிப்
பிள்ளை' யென்று நீர் பெற்று விட்டீரே!

என்று மருமகன் மாமனைப் பார்த்தும்

ஏழு வருஷமாய் இங்கிலீஷ் படித்தையே,
ஏ, பி, ஸி, டி, எழுதத் தெரியுமா?
எத்தனை பணத்தை வாரி யெறிந்தேன்.

என்று மாமன் மருமகனைப் பார்த்து
பேசுவது  நகைச்சுவை.

மாமனுக்கும் மருமகனுக்கும் சண்டை முற்றிப் போய் நீதிமன்றத்திற்கு வழக்கு செல்கிறது. இதில் தோற்ற மாமன் நோயுண்டு படுக்கையில் விழுகிறான்.
இறக்கும்போது திருவாசகத்தை படி என  அவரின் மகனிடம் கொடுத்தனர். அவன்,

ஆரே தமிழை அறிபவர்? என்றான்;  பள்ளியில் தமிழும் படித்தேனோ? என்றான்,
பரீக்ஷையில் தமிழொரு பாடமோ? என்றான்;
என்னால் படிக்க இயலாது என்னச்
சுவரிற் சாய்ந்து சும்மா இருந்தான்.

என்று கவிமணி அவர்கள், நாஞ்சில் நாட்டில் தமிழ் பாடமாக இல்லாமல் மலையாளம் இருந்ததால் ஏற்பட்ட விழைவுகளையும் குறிப்பிடுகிறார்.

கவிமணியின் கவிதையைப் பற்றி டி.கே.சி தாத்தா அவர்கள் குறிப்பிடும் போது,  "கவிமணியின் கவிதைக்கு உயிரையே கொடுக்கலாம்" என்றார். அந்தளவுக்கு சிறப்புடையது.

No comments:

மருமக்கள்வழி மான்மியம் - கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை மருமக்கள்வழி மான்மியம் 1916ல் திருவனந்தபுரத்திலிருந்து வெளிவந்த தமிழன் என்ற இதழ...